தாய்ப்பால் கொடுக்கும் போது இளந்தாய்மார்கள் முலையழற்சி என்னும் பிரச்சனையை சந்திப்பது உண்டு.
தாய்ப்பால் கொடுக்கும் இளந்தாய்மார்கள் கண்டிப்பாக இந்த மார்பக நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இவை முலையழற்சி என்று அழைக்கப்படுகிறது ஆங்கிலத்தில் மாஸ்டிடிஸ் என்கிறோம்.
மார்பக நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் போது தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அம்மாவும், தாய்ப்பால் குடிக்க முடியாமல் குழந்தையும் பெரும் அவதிக்கு உள்ளாவதுண்டு. இந்த மார்பக நோய்த்தொற்று என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மார்பக நோய்த்தொற்று என்னும் முலையழற்சி
தாய்ப்பால் கொடுக்க தொடங்கும் பிரசவத்துக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்துக்குள் தான் இந்த உபாதை பெருமளவு ஏற்படுகிறது. தாயின் மார்பகங்களில் மார்புகாம்புகளில் வெளிப்புறம், உள்புறம், மார்பு காம்புகளைச் சுற்றி, காம்பில் வெடிப்பு, உலர்வு போன்ற இடங்களில் இவை உருவாகலாம்.
சிசேரியனுக்கு பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
இந்த அழற்சி இயல்பாக வரக்கூடியது என்றாலும் சற்று கவனமாக சிகிச்சை பெறவேண்டும். இல்லையெனில் மோசமான விளைவை உண்டாக்கிவிடும். முலையழற்சி மார்பக நோய்த்தொற்று உண்டாவதற்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அறிகுறிகள்
குழந்தைக்கு பால் புகட்டும் போது மார்பக காம்புகளில் வலி உண்டாகும். பால் கொடுத்தபிறகும் வலியானது நீண்ட நேரம் இருக்கும். குழந்தை பால் குடிப்பதன் மூலம் குழந்தையின் வாய்க்கும் தொற்று பரவி குழந்தை பால் குடிக்க முடியாமல் அழத்தொடங்கும்.
மார்பக காம்புகள் வறட்சியாக இருக்கும். சிலருக்கு வெடிப்பு நன்றாக தெரியும். கை வைக்கும் போதே எரிச்சல் இருக்கும். மார்பகத்தை தளர்வாக வைத்திருக்க செய்யும் ஆடைகளில் கூட மார்பக காம்புகள் உராயும் போது அதிக வலியை உண்டாக்கிவிடும்.
சிலருக்கு மார்பக காம்பில் வறட்சி, உலர்வு இருக்காது. ஆனால் உள்ளுக்குள் தொற்று பாதிப்பு இருக்கும். சிலருக்கு மார்பகம் மென்மையாக இருக்கும். மார்பகத்தில் வீக்கம் இருக்கும். தொடர்ந்து காய்ச்சல் இருக்கும்.
ஆனால் பொதுவான அறிகுறியே மார்பகத்தில் தொற்று நேர்ந்தால் தாய்ப்பால் புகட்டுவதில் கண்டிப்பாக சிரமம் உண்டாககூடும். மார்பகத்தில் வலி உணர்வு அதிகரிக்கும். இப்படி இருந்தாலே அது மார்பக நோய்த்தொற்றுதான் என்பதை அறிந்து மருத்துவரை அணுகுவது நல்லது.
காரணங்கள்
எதனால் இந்த பிரச்சனை உண்டாகிறது என்பதை அறிந்துகொண்டாலே பெருமளவு இதை தவிர்க்கவும் முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் சிறந்த முறைகள் உண்டு. இந்த நிலையில் இல்லாமல் அசெளகரியாமான நிலையிலேயே பால் கொடுக்கும் போது பால் கட்டிகொள்ள வாய்ப்பு உண்டு.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் பால் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பால் சுரப்பு சீராக இருக்கும். இல்லையெனில் ஒரு பக்க மார்பில் பால் கட்டிகொண்டு தொற்று உண்டாக வாய்ப்புண்டு.
சில குழந்தைகள் உமிழ்நீரில் இருக்கும் கிருமிகள் மார்பக காம்புகள் வழியாக பால் குழாய்க்குள் சென்று தொற்றை உண்டாக்க வாய்ப்புண்டு.
பாதிப்புகள்
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும் போது மார்பகத்தில் நோய்த்தொற்று உண்டாகி குழந்தையால் பால் குடிக்க முடியாமல் போனால் அவை பெரும் பாதிப்பை குழந்தைக்கு உண்டாகும்.
மார்பக நோய்த்தொற்றால் குழந்தைக்கு வாய்ப்புண் உண்டாகும் போது குழந்தையால் பாலை உறிஞ்சு குடிக்க முடியாது. உரிய பசியாறுதல் இல்லாமல் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய சத்தும் கிடைக்காது.
பிரசவத்துக்கு பிறகு இளந்தாய்மார்கள் எதிர்ப்புசக்தியை நிறைவாக கொண்டிருக்க வேண்டும். தாயின் உடலில் நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் ஈஸ்ட் தொற்றை கட்டுக்குள் வைக்கிறது. இவை தவறும் போது கேண்டிடா தொற்று உண்டாகிறது.
இந்த தொற்றை ஆரம்பத்தில்கவனிக்காமல் விட்டால் பெருமளவு தீவிரப்படுத்திவிடும். அதனால் மார்பக வலியை உதாசினம் செய்யாமல் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. தொற்றை பொறுத்து முழுமையாக குணமடைய 7 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம்.
தவிர்க்கும் முறை
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சற்று கவனத்துடன் இருந்தால் மார்பகத்தில் புண் வராமல் காத்துகொள்ளலாம். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும், பின்னரும் சுத்தமான நீரில் மார்பகத்தை கழுவ வேண்டும். மார்பக காம்புகளில் பால் கசிவு வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
உள்ளாடைகளை சுத்தமாக துவைக்க வேண்டும். கிருமிகள் அண்டாமல் இருக்க வெந்நீரில் அலசி வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும். தினமும் உள்ளாடைகளை மாற்ற வேண்டும். உள்ளாடையில் பால் கசிவு ஏற்பட்டாலும் உடனே மாற்றிவிட வேண்டும். உடுத்தும் ஆடையால் மார்பகத்தில் உராய்வு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த 5 நிலைகளில் தான் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டணும், இளந்தாய்மார்களுக்கானது!
தாய்ப்பால் தர வசதியாக இருக்கும் பிரத்யேகமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். பால் வாசம் வருகிறது என்று வாசனை மிகுந்த சோப்பு வகையறாக்களை மார்பில் அதிகம் பயன்படுத்த கூடாது. மார்பகத்தில் கைகளை வைப்பதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுவது நல்லது.
தாய்ப்பால் நிலை, சுத்தம் சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு இவை மூன்றிலும் கவனம் செலுத்தினால் முலையழற்சி என்னும் மார்பக நோய்த்தொற்று வராமல் தடுக்கலாம்.
No comments:
Post a Comment