Tuesday, August 23, 2016

மாதவிலக்கு என்பது..

மாதவிலக்கு என்பது..

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் நமது உடலின் கழிவுகள் எப்படி வியர்வையாக, சிறுநீராய், மலமாய் வெளியேறுகிறதோ அப்படியான ஒன்றுதான் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு. அதைத் தாண்டிய முக்கியத்துவம் எதுவும் இந்த நிகழ்வுக்கு இல்லை. பெண்ணாய் பிறந்த எல்லோருக்கும் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் இதைப் பற்றிய தெளிவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக தவறான எண்ணப் போக்குகளே காலம் காலமாய் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. மாதவிலக்காகும் பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக நிறைய ஓய்வு தேவைப் படுகிறது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் அந்த நாட்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தனர். நல்ல ஓய்வும், உடல் சுத்தமும் தேவை என்பதன் பொருட்டே மாதவிலக்கு என்கிற பெயர் வழங்கியது. பெண்களின் உடல் இயங்கியலில் ஏற்படும் இந்த இயல்பான நிகழ்வினைக் குறித்த எனது புரிதல்களையும், அதற்கு நம் சித்தர் பெருமக்கள் அருளிய சில தெளிவுகளையும் பொதுவில் வைப்பதே இந்த குறுந் தொடரின் நோக்கம். பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையும், அதனை பாதுகாக்க வேண்டி உருவான மற்ற நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழியே குருதிப்போக்கு ஏற்படுவதையே மாத விலக்கு என்கிறோம். இத்தகைய போக்கு குறிப்பிட்ட நபரின் உடல் அமைப்பினைப் பொறுத்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். ஒரு நாளில் குறைந்தது ஐம்பது மில்லி லிட்டர் முதல் 80 மில்லி லிட்டர் ரத்தம் இவ்வாறு வெளியேறும். இவை நம் உடலின் கெட்ட ரத்தம் என்றொரு தவறான நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது. பருவம் எய்திய பெண்களுக்கு இந்த மாதவிலக்கு 21 நாள் முதல் 45 நாட்களுக்குள் நிகழும். இது அவ்வந்த நபரின் வயது, உடல் அமைப்பு, அவர் வாழும் சூழல் மற்றும் அவர்களுடைய உளவியல் போன்ற கூறுகளைப் பொறுத்து முன் பின் நிகழலாம். மேற்சொன்ன காரணங்களினால் மிகக் குறைவான விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே சரியான சமயத்தில் அதாவது 21 நாட்களில் மாதவிலக்கு உண்டாகிறது என்பது குறிப்பிடத் தக்கது. மாதவிலக்கு சுழற்சி என்பது என்ன?, அது எதனால் நடை பெறுகிறது? எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்கும் அசைபடம் ஒன்றினை இணைத்திருக்கிறேன். சுருக்கமாக சொல்வதென்றால் பெண்ணின் சூலகத்தில் உருவான கருமுட்டையானது வளர்ச்சி அடைந்து முதிர்ந்த நிலையில் கருப் பையில் வந்து சேர்கிறது. இவ்வாறு வந்த கருமுட்டையை பாதுகாக்க வேண்டி கருப்பையானது சில நீர்மங்களை உருவாக்கி கருமுட்டையை பாதுகாக்கிறது. மேலும் கருவறையின் சுவர்கள் தடித்து கருமுட்டையின் வளர்ச்சிக்குத் தேவையான குருதியை நிரப்பி வைக்கிறது. இந்த காலகட்டத்தில் கருத் தரிப்பு நிகழாவிட்டால், அந்த கருமுட்டையானது சிதைந்து அழிந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக பிறப்பு உறுப்பின் வழியே வெளியேறுகிறது. இந்த நிகழ்வு சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனையே மாதவிலக்கு சுழற்சி என்கிறோம்.

No comments:

Post a Comment