Tuesday, August 23, 2016

சூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம்

சூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம் 

சித்த மருத்துவம், புலிப்பாணிச் சித்தர் வல்லாதி என்பது சேங்கொட்டையைக் குறிக்கும். இதன் தாவரவியல் பெயர் “Semecarpus anacardium” என்பதாகும். இது இயல்பில் நச்சுத் தன்மை கொண்டது. இதனை முதன்மையான மூலப் பொருளாகக் கொண்டு பல மருந்துகளை சித்த மருத்துவம் முன் வைக்கிறது. இதன் பொருட்டே பல்வேறு சித்தர்களும் வல்லாதியின் பெயரில் நூல்களே அருளியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்ற நூலில் சேங்கொட்டையினை தைலமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம்.  தானான வல்லாதி தைலமொன்று தயவாகச் சேங்கொட்டை அழிஞ்சிக்கொட்டை மானான பூவத்திக் கொட்டையொடு மைந்தனே யெட்டியுட கொட்டைதானும் வானான வேம்பின் புண்ணாக்குக்கூட வகையான சிவனது வேம்புமேதான் கானான இவையெல்லாஞ் சரியெடையாய்த் கனிவான கன்னியிட சாற்றில்போடே - புலிப்பாணி சித்தர். போடேநீ யொருநாள்தான் னூறவைத்துப் பொங்கமுடனிரு நாள்தா னெடுத்துலர்த்தி ஆடேநீ குழித்தைலமாக வாங்கி அப்பனே காசெடைதான் கொண்டாயானால் நாடேநீ பனைவெல்லந் தன்னிற்கொள்ளு நாயகனே சூலைபதினெட்டுந் தீரும் வாகேநீ போகாமல் மண்டலங்கால்கொள்ள மைந்தா பத்தியந் தானொன்றாகாதே - புலிப்பாணி சித்தர். சேங்கொட்டை, அழிஞ்சில் கொட்டை, பூவந்திக் கொட்டை, எட்டிக் கொட்டை, வேப்பம் புண்ணாக்கு, சிவனார் வேம்பு ஆகியவைகளை சம அளவில் எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு அது மூழ்கும் வரை கற்றாழை சாறு விட்டு ஒரு நாள் முழுதும் ஊறவைத்து, மறுநாள் எடுத்து நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துச் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். (குழித்தைலம் பற்றிய மேலதிக விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்.) இதுவே வல்லாதி தைலம். தினமும் இந்த தைலத்தில் இருந்து ஒரு பண எடை அளவு எடுத்து காலை அல்லது மாலை என ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் உண்டு வந்தால் பதினெட்டு வகையான சூலை நோய்கள் நீங்கும் என்கிறார். இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

1 comment:

  1. இந்தப் பதிவில் கீழேயுள்ள இரண்டு பாடல்கள் தரப்பட்டுள்ளன.

    வல்லாதி என்பது சேங்கொட்டை

    (காய் காய் காய் /
    காய் காய் மா தேமா)

    தானான வல்லாதி தைலமொன்று
    ..தயவாகச் சேங்கொட்டை அழிஞ்சிக் கொட்டை
    மானான பூவத்திக் கொட்டையொடு
    ..மைந்தனே யெட்டியுட கொட்டை தானும்
    வானான வேம்பின்புண் ணாக்குக்கூட
    ..வகையான சிவனது வேம்பு மேதான்
    கானான இவையெல்லாஞ் சரியெடையாய்த்
    ..கனிவான கன்னியிட சாற்றில் போடே 1

    போடேநீ யொருநாள்தான் னூறவைத்துப்
    ..பொங்கமுட னிருநாள்தா னெடுத்து லர்த்தி
    ஆடேநீ குழித்தைல மாகவாங்கி
    ..அப்பனே காசெடைதான் கொண்டா யானால்
    நாடேநீ பனைவெல்லந் தன்னிற்கொள்
    ..ளுநாயகனே சூலைபதி னெட்டுந் தீரும்
    வாகேநீ போகாமல் மண்டலங்கால்
    ..கொள்ளமைந்தா பத்தியந்தா னொன்றா காதே 2 - புலிப்பாணி சித்தர்

    ReplyDelete