Thursday, February 26, 2015

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட!!!

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட!!!
*******************************************************************
உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ்டிரைடிஸ்” என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.
அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.
மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.
தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.
இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?
தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.
இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.
அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.
ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

No comments:

Post a Comment