மூலிகை சமையல் - புளியாரை கீரை
மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது. கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத் தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.
நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கீரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துவருகிறோம். இம்மாத இதழில் தமிழகம் முழுவதும் பரந்து காணப்படும் புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.
இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil - Puliyarai
English - Indian sorrel
Telugu - Pulichinta
Malayalam - Paliyarel
Sanskrit - Changeri
Hindi - Tinpatiya
Bot. Name - Oxalis corniculata
புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும்.
புளியாரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி பல நூல்களில் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு
நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே
மூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்
கோலப் புளியாரைக்கு
- அகத்தியர் குணபாடம்
பித்த மயக்கத்தைப் போக்கும்
சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் எற்படும் பாதிப்புகள் குறையும்.
மூல நோயைக் குணப்படுத்த
அசீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய் உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.
புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி அதனுடன் பூண்டு, வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
பசியைத் தூண்ட
மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி தவிப்பார்கள். இவர்களுக்கு சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல் இருக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும் உண்டாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் என பல நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.
இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.
தலைவலி நீங்க
தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதனுடன் சிறிது பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.
கட்டிகள் குணமாக
பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது புளியாரைக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள் பழுத்து எளிதில் உடைந்து புண்கள் குணமாகும்.
முகப்பரு நீங்க
புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து முகத்தில தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கி முகம் பளபளக்கும்.
பாலுண்ணி, மரு நீங்க
புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி, வெண்ணெய் கலந்து பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை காய்ந்து உதிர்ந்துவிடும்.
குன்ம நோய்களுக்கு
புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு பசுவின் மோர் சேர்த்து தினமும் காலை வேளையில் அருந்திவந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குண-மா-கும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை அடையலாம்.
இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
கண்கள் குளிர்ச்சியடைய
கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக சூடாகி வறட்சியடையும். இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் கண் பார்வை நரம்புகள் பலப்படும்.
புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.
நல்ல சுவையுடன், மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை கிடைக்கும் காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.
No comments:
Post a Comment