Monday, September 12, 2016

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்



"பதினான்கு வேகப்பேர்கள்,பகிர்ந்திட அவற்றைக்கேளாய்,
விதித்திடும் வாதத்தும்மல், மேவுநீர் மலங் கொட்டாவி,
சுதித்திடும் பசிநீர் வேட்கை ,காசமோடிளைப்பு நித்திரை,
மதித்திடு வாந்தி கண்ணீர், வளர்ச்சுக்கிலஞ் சுவாசமாமே,

பதினொன் சித்தர் நாடிநூல்-

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் - 01


உடலிலிருந்து வெளியேறும் காற்றினை அடக்குவதால் வரும் துன்பங்கள் – தீர்வுகள்
.

உடலின் இயற்கையான வேகங்கள் எனப்படும் இயக்கங்களைத் தடுக்கக் கூடாது என சென்ற பதிவில் பார்த்தோம். அதில் முதன்மையான உடலிலிருந்து வெளியேறும் காற்றுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
.

செரிமானத்தின் போது

வயிறு, குடல் பகுதியில் இயற்கையாக உருவாகும் காற்று வாய் வழியாக வெளியேறும் . 

(மேல்க்காற்று, ஏப்பம்) அல்லது மலவாயின் வழியே வெளியேறும் மலக்காற்று - (கீழ்க் காற்று, அபான வாயு). இந்த இரு வகையான காற்றுக்களையும் வெளியேற்றாமல் தடுத்தால் பல துன்பங்கள் ஏற்படும் என சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன.

உடம்பிலிருந்து இயற்கையாக வெளியேறும் வாயுவை முழுவதுமாகத் தடை செய்தாலும் சிறிது சிறிதாகத் தடை செய்து வெளி ஏற்றுவதாலும் மார்புப் பகுதியில் காற்று சேர்ந்து கொண்டு குத்தல் வலி ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் 

# வயிற்றுப் பகுதியில் செரிக்கும் தன்மை குறைந்து புளிப்புத் தன்மை மிகுந்து அழற்சி (Inflammation – Gastritis) ஏற்படும். 

# குடல் பகுதியிலும் வாயு தங்கித் துன்பம் விளைவிக்கும். 

# பின்பு உடல் முழுமையும் குத்தல் வலி ஏற்படும். 

# மலமும் சிறுநீரும் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுத் துன்பமுண்டாகும். 

# பின்பு பசி உணர்வு சிறிது சிறிதாகக் குறையும்.
.

இப்படி வெளியேற்றாமல் தடுக்கப்பட்ட வாயு இறுதியில் புத்தியையும் மந்தப்படுத்தும்.

மொத்தத்தில் வயிற்றின் உள் உறுப்புகள் (கல்லீரல், மண்ணீரல் போன்றவை), மார்பு உறுப்புகள் (இதயம், நுரையீரல்), மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபாடடைகின்றன.

மேலும் 

# விதை வாதம் (Inflammation of Scrotum), 

# குடலிறக்கம் (Inguinal and Umbilical hernia), 

# குடல் தளர்வு (Diverticular disease of intestine – creating pockets in the intestinal wall), 

# வயிற்று உப்பிசம் (Floating abdomen) 

போன்ற பல நோய்கள் தொடரும்.

.

வயிற்றில் எப்படி அதிகப்படியான காற்று தோன்றுகிறது?

முக்கியமான இரண்டு காரணங்களால் வயிற்றில் காற்று சேருகின்றது. 

1. வாயின் வழியே காற்று உள் செல்லுதல் (Aerophagia) 

2. உணவின் மீது நுண் கிருமிகள் (Bacteria) வினைபுரிதல்.

.

வாய் வழியே காற்று உட்செல்லக் காரணங்கள் (புறக் காரணம்) 

1. உணர்வு மாறுபட்ட நிலைகளில் – கவலை, அதிக மகிழ்ச்சி, படபடப்பு. 

2. உணவு, நீர் போன்றவற்றை வேகமாக உட்செலுத்துவதால். 

3. தேவையில்லாமல் சில பொருட்களை வில் வைத்து சுவைத்துக் கொண்டோ கடித்துக் கொண்டோ இருத்தல் – Chewing gum. 

4. புகைப் பிடித்தல்.

5. காற்று கலந்த செயற்கைக் குளிர்பானங்கள் (Carbonated beverages)

.

வயிற்றினுள் அதிகப்படியாக காற்று உருவாகக் காரணங்கள் (அகக் காரணம்) :

வாயில் உணவை நன்கு மெல்லாமல் அரைகுறையாக வயிற்றுக்குள் அனுப்புவதாலும் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் ஒரு காரணத்தால் சரியாகச் செரிமானம் நடக்காததாலும் அரைகுறையாகச் செரிமானமான உணவு குடலைக் கடக்கும் போது குடலில் உள்ள நுண்கிருமிகள் (Bacteria) அந்த உணவின் மீது வினைபுரிந்து அதிகப்படியான வாயுவை உண்டாக்குகின்றன.
.

மேலும் சில காரணங்கள்: 

1. பழக்கமில்லாத நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல். 

2. அரைகுறையாக மென்று சாப்பிட்ட சில பழங்கள் (கொய்யா, பேரீச்சை, அத்தி, திராட்சை ) இவற்றில் உள்ள பழச் சர்க்கரை (Fructose) அதிகப்படியான வாயுவை உண்டாக்கும். 

3. முட்டைக்கோஸ், காலி பிளவர் போன்ற காய்கள் இயற்கையாகவே அதிகம் வாயுவை உண்டாக்கும். அதற்கு அவற்றில் உள்ள Raffinose என்கிற ஒருவகையான சர்க்கரை காரணமாக உள்ளது. அது போன்றே பாசிப்பயிறு, கொண்டைக் கடலை, கடலை மாவு, கிழங்குகள், வாழைக்காய், கொத்தவரங்காய் போன்ற பல உணவுப் பொருட்கள் வாயுவை உண்டாக்கும். அவற்றையெல்லாம் முறைப்படி பக்குவப்படுத்தி சமைக்க வேண்டும். 

4. செயற்கை இனிப்புகள் (Artificial sweeteners’) வயிற்றில் நச்சுக் காற்றினை உண்டாகும். அதே போன்று சில மருந்துகளில் கலக்கப்படும் இனிப்புகளும் (Sorbital – Cough syrup) காற்று உண்டாக்கும். 

5. பால் பொருட்களில் மோரும் நெய்யும் மட்டும்தான் வயிற்றில் காற்று உண்டாக்காமல் வயிற்றைப் பாதுகாக்கும். பால், பாலாடைக்கட்டி, குழைவு (Cream) போன்ற பிற பால் பொருட்கள் வயிற்றில் காற்றினை உண்டாக்கும்.

எனவே தான் சித்தர்கள் மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்ண வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

பொதுவாக ஒரு நாளில் (24 மணியில்) வயிற்றில் உருவாகும் காற்று 450 மி.லி யிலிருந்து 1500 மி.லி வரை உருவாகி வெளியேறும். அதிகப்படியாக உருவாகும் காற்று வெளியேறாமல் இருப்பதால்தான் பல கேடுகள் உண்டாகின்றன.
.

வயிற்றில் தேவையில்லாமல் அதிகப்படியாக காற்று உருவாகாமல் தடுக்க பல உபாயங்கள் உள்ளன. எளிய 2 முறைகளை மட்டும் பார்ப்போம்.
.

1. அன்னப்போடி

சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்), ஓமம், பெருங்காயம், இந்துப்பு (அல்லது கல் உப்பு) ஆகிய 7 பொருட்களையும் சம அளவு எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கலந்த கலவைக்கு சம அளவு காய்ந்த கறிவேப்பிலைப் பொடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அன்னப் பொடி என்று பெயர். இதனை சோறுடன் கலந்தோ அல்லது மோருடன் கலந்தோ உண்ண அதிகப்படியான காற்று கட்டுப்படும். 
.

2. சுக்கு, மிளகு, கிராம்பு, கல் உப்பு ஆகிய நான்கையும் சம அளவு கலந்து பொடித்துக் கொண்டு அதில் 8 சிட்டிகை அளவு (pinch) 3 வேளை உணவிற்கு முன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் வாயு கட்டுப்படும்.

தும்மலை (Sneeze or Sternutation) அடக்குவதால் வரும் துன்பங்கள் – தீர்வுகள்
.

தும்மல் (Sneeze or Sternutation) என்பது மூக்கில் எற்படும் பிரச்சனைகளை (உறுத்தல், அரிப்பு) நீக்க உடலால் ஏற்படுத்தப்படும் ஒரு செயல் (Way of removing an irritation from the nose).
.

தும்மல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. 

# சில நோய் நிலைகள் தொடர்ச்சியான தும்மலை ஏற்படுத்தும். 

# சில வேளை மூக்கின் உட்புறம் சிறு தூசி ஒட்டிக் கொண்டால் ஒரேயொரு தும்மலோடு அந்த தூசி வெளியேறும். பின்பு தும்மல் வராது. 

மொத்தத்தில் எப்படிப்பட்ட தும்மலாக இருந்தாலும் (காரணம் முக்கியமல்ல) அதனை அடக்கக் கூடாது. அது பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சித்தர்கள் அடக்கக் கூடாத உடல் வேகங்களில் ஒன்றாகத் தும்மலை வகைப் படுத்தியுள்ளார்கள்.
.

தும்மல் இயல்பாக நிகழ்வதற்கு மூக்கில் இருந்து செயல்படும் ஒரு காற்றின் வேலையே காரணம். அந்தத் தும்மலைத் தடுத்தால் தலையின் உள்புறம் பல நோய்கள் உண்டாகும். மூளை பாதிக்கப்படும். கன்ம இந்திரியங்கள் (Organs of motor functions) எனப்படும் வாய், கால், கை, மலவாய், சிறுநீர் வாயில் மற்றும் ஞான இந்திரியங்கள் (Organs of sensory functions) எனப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற பத்து முக்கிய உறுப்புகளும் இயல்பாக இருப்பது போன்ற தோற்றமளித்தாலும் அவை கேடடையும். அதாவது இந்த இந்திரியங்களுக்கு (உறுப்புகளுக்கு) அடிப்படைக் கூறுகள் மூளையில் இருப்பதால் அவை பாதிப்படைகின்றன.

# முகம் ஒருபுறம் கோணுதலை ஏற்படுத்தும் முகவாதம் ஏற்படும். 

# வயிற்றின் அழுத்தம் கூடுவதால் ஆண்களுக்கு விதை வீக்கம், குடல் இறக்கம் ஏற்படும். 

# பெண்களுக்கு கொப்பூழ் பிதுக்கம் (Umbilical hernia) ஏற்படும் என்று சித்தர் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
.

தும்மல்:

மூக்கின் உட்புறம் உள்ள சளிச்சவ்வில் (Mucus membrane) ஏதேனும் ஒரு காரணத்தால் உருவாகும் அரிப்பு அல்லது உறுத்தல் (Irritation) மூளையின் ஒரு குறிப்பிட்ட சிறப்பான பகுதியைத் தூண்டுகிறது. அந்தப் பகுதிக்கு தும்மல் மையம் (Sneeze center) என்று பெயர். தும்மல் மையம் தூண்டப்பட்டவுடன் அது தும்மலை உருவாக்கும் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து தும்மலை உண்டாக்குகின்றது. 

# தும்மலை வயிற்றுத் தசைகள், 

# மார்புத் தசைகள், 

# உதர விதானம் (Diaphragm), 

# குரலை உண்டாக்கும் தசைகள், 

# கழுத்துத் தசைகள், 

# கண் தசைகள் 

போன்ற தசைகள் இணைந்து உருவாக்குகின்றன.
.

தும்மல் உருவாகும் போது நுரையீரலிலிருந்து காற்று மணிக்கு 100 மைல் தூரம் என்ற வேகத்தில் மூக்கின் வழியேயும் வாயின் வழியேயும் வெளியேறும். அப்போது ஏறத்தாள 5000 குட்டிக்குட்டி நீர்த்திவலைகள் (Droplets) 12 அடி தொலைவு வரை வெளித் தள்ளப்படும். இந்த நிகழ்வு மூக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சரிசெய்ய உதவும். அங்கு தங்கி உறுத்தலை ஏற்படுத்தும் தூசிகளையும் வெளிப்புறத் துகள்களையும் கிருமிகளையும் வேகமாக வெளியேற்றும்.
.

  தும்மல் உண்டாக்கும் காரணிகள்: 

.

1. வெளிப்புறத்திலிருந்து மூக்கிற்குள் சென்று ஒட்டிக் கொள்ளும் சிறு துகள்கள். காட்டாக தூசு, வேதிப் பொருள், புகை, மிளகு போன்ற வாசனைப் பொருட்கள், மண மூட்டிகள், விலங்குகளின் மெல்லிய முடி, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் தோல் கழிவுகள் (Pet animal dander) தாவரங்களிலிருந்து வரும் ஒவ்வாத பொருட்கள் (Pollen) 
.

2. சுற்றுப்புறத்தின் திடீர் வெப்பநிலை மாறுபாடு. சூடு கூடுவதோ குளிர் கூடுவதோ திடீரென நிகழ்ந்தால் தும்மல் உண்டாகும். மூக்கின் உட்புறமுள்ள சிறப்பான சவ்வு நுரையீரலுக்கு ஒரே சீரான வெப்பநிலையுள்ள காற்றையே அனுப்பும். அந்தச் சவ்வு தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் போது தும்மல் ஏற்படும். 
.

3. குளிர் காற்று, சாரல், மழை. 
.

4. வயிறு முழுமையும் நிரம்பும்படியாக உணவருந்தல். 
.

5. திடீரென அதிக வெளிச்சத்தைப் பார்த்தல். 
.

6. கிருமித் தொற்று. 
.

7. சில நோய்நிலைகள்: உதாரணத்திற்கு சாதாரண மூக்கடைப்பு (சலதோடம்), மூக்கு உள்பகுதியில் ஏற்படும் அழற்சி (Rhinitis – Nasal cavity – inflammation), சுரம், மூக்கில் அடிபடுதல் (Injury to the Nasal cavity).
.

இப்படி பல்வேறு காரணங்களால் ஏற்படும் தும்மல் பொது இடங்களிலோ, முக்கியக் கூட்டங்களிலோ, அமைதியான இடத்திலோ, வழிபாட்டுத் தளங்களிலோ, பள்ளி கல்லூரி வகுப்புகளிலோ நிகழ்ந்தால் அங்கு நிலவும் அமைதியை கெடுக்கும் என்கிற எண்ணத்தால் பலராலும் அடக்குப் படுகின்றது. இவ்விதம் தும்மலை அடக்குவதால் பல்வேறு துன்பங்கள் தொடரும் என இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை எல்லாம் சித்தர்கள் பலகாலம் முன்பாக சொன்னவற்றை ஒட்டியே உள்ளன.
.

அவை: 

1. மூளையில் பரவியிருக்கும் இரத்தக்குழாய் விரிவடைந்து இரத்தத் தேக்கம் ஏற்படும் (Brain vessels – Anneurysm). மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படையும். இதனால் தற்காலிகமாகவோ தொடர்ச்சியாகவோ தலைவலி உண்டாகும்.
.

2. வெளியாகும் காற்று அழுத்தம் தடைபடுவதால் அந்த அழுத்தம் அப்படியே காதிற்குள் சென்று செவிப்பறையை (Ear drum) பாதிக்கச் செய்யும். சில வேளை கேட்கும் திறன் இழப்பு ஏற்படும். 
.

3. மூக்கில் தங்கியிருக்கும் (பிரச்சனையை ஏற்படுத்தும்) பொருட்களை வெளிப்படுத்தவே தும்மல் ஏற்படுகிறது. அதனைத் தடுத்தால் பிரச்சனையை ஏற்படுத்தும் பொருட்கள் குறிப்பாக நுண்கிருமிகள் மூக்கிலேயே தங்கி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். மூக்கின் உள் சவ்வு வீக்கம் ஏற்பட்டு அதன் தாக்கம் உடலின் பல இடங்களுக்குப் பரவும். 


4. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் மார்பு அறை அழுத்தத்தைப் பாதிக்கும். மார்பறை (Chest) அழுத்தம் அதிகமாவதால் இதயத்திற்குள் செல்லும் இரத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் செலுத்தப்படும். இந்த நிகழ்வு ஒருமுறை எனில் இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். தொடர்ச்சியாகப் பலமுறை எனில் இரத்த ஓட்டத்திலும் இதய இயக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும். 


5. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் வயிற்றறையையும் பாதிக்கும். இதனால் வயிற்றறை அழுத்தம் அதிகமாகி குடல் பிதுக்கம் (Hernia) ஏற்படும். அது கொப்பூழ் பகுதியிலோ (Umbilical hernia) அல்லது தொடையிடுக்குப் பகுதியிலோ (Inguinal hernia) ஏற்படலாம். 
.

6. கண் அழுத்தம் அதிகமாதல், கண் உட்புறத்தில் உள்ள நுட்பமான இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுதல், இரத்தக்கசிவு ஏற்படல் போன்றவை ஏற்படும்.
.

தும்மல் வருவதற்கானக் காரணங்களை அறிந்து அவற்றை தான் நீக்குதல் வேண்டும். தும்மலை எக்காரணத்தைக் கொண்டும் அடக்கவே கூடாது.

தும்மல் வருவதைத் தடுக்க ஆவிபிடித்தல், நசியம் (மூக்குத்துளி) மருத்துவம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். 

மருத்துவ ஆலோசனை பெற்று முறையான மருத்துவம் மேற்கொண்டால் தடுத்தவிட முடியும் அல்லாமல் சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் திடீர் தும்மலை அடக்காமல் விடுதல் வேண்டும்.

No comments:

Post a Comment