Saturday, November 15, 2014

ஓரிதழ் தாமரை..!

ஓரிதழ் தாமரை..!
மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் நாட்டில் பிறந்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.

பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.

இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.

நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை.
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும்

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.

சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 

இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.

உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது தாது வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

 













No comments:

Post a Comment