Wednesday, March 18, 2015

அரைக்கீரை !!!

அரைக்கீரை !!!

கீரை தேவை

தமிழர்களின் உணவில் இன்றியமையாத தாவிர உணவு கீரைகள். பச்சைப்பசேல் என்றிருக்கும் பல கீரை வகைகள் தமிழகத்தில் எங்கும் கிடைக்கின்றன. காய்கறிகளை பொதுவாக இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என்று 5 வகையாக பிரிக்கலாம். இவற்றில் எளிதாகவும், விரைவாகவும் ஜீரணமாவது கீரைகள் தான். தமிழகத்தில் மட்டுமல்ல, நமது தேசம் முழுவதுமே கீரைகள் விரும்பி உண்ணப் படுகின்றன. கீரைகளில் கால்சியம், இரும்பு, பீடா - கரோடின், விட்டமின் 'சி', ரிபோஃப்ளேவின் (விட்டமின் பி2), ஃபோலிக் அமிலம். போன்றவை அதிகம் உள்ளன. கீரைகளில் பச்சயம் (Chlorophyll) நிறைந்திருக்கிறது. லெசித்தின் கரோட்டினாய்டு, அல்கலாய்ட், முதலியவைகள் மற்றும் ஆக்சாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் முதலிய கரிம அமிலங்களும் உள்ளன. கொழுப்பும், கார்போஹைடிரேட்டும் குறைவு. தாதுப்பொருட்களும், வைட்டமின்களும் அதிகம். எனவே வருமுன் காக்கும் உணவாக கீரைகளை சொல்லலாம்.

மலிவாகவும், எளிதாகும் கிடைக்கும் கீரைகளில் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே தினமும் 50 லிருந்து 100 கிராமாவது கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் கீரை அவசியம்.

ஆயுர்வேதத்தின் படி, நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதி உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு பகுதி ஜீரண சக்திக்கு (ஜாடராக்கினி) உதவுகிறது. இன்னொரு பகுதி சத்தாக மாறி உடலில் தங்குகிறது. மீதியுள்ள பகுதி மலமாக வெளியேறுகிறது. இந்த நான்கு செயல்பாடுகளுக்கும் காய்கறிகள் உதவுகின்றன. கீரைகள் குறிப்பாக ஜீரணிக்கவும் மலத்தை வெளியேற்றவும் உதவுகின்றன. பிற இரண்டு செயல்பாடுகளுக்கு (வளர்ச்சி, உடல் போஷிப்பு) கீரைகள் அவ்வளவு பயன்படுவதில்லை. எனவே காய்கறிகளையோ, கீரைகளையோ, தனி உணவாக உண்பதை ஆயுர்வேதம் தவிர்க்கச் சொல்கிறது. ஆனால் நவீன ஆராய்ச்சிகளின் படி கீரைகளை தனியாக உண்பதால் பல நன்மைகள் கிடைக்கும். 15 நாட்களாவது கீரையை காலை உணவாக தனி உணவாக உண்பது நல்லது. கீரைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்கிறது ஆயுர்வேதம். இரவில் ஜீரண சக்தி குறைந்திருக்கும். தூக்கத்தாலும், இரவின் குளிர்ச்சியாலும் ஜீரண சக்தி மந்தமாகிவிடும். இரவில் கீரை சாப்பிட்டால் கீரைப்பூச்சிகள் உண்டாகலாம். மலப்போக்கு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல் முதலியன ஏற்படலாம்.

ஒவ்வொரு வகை கீரையிலும் ஒவ்வொரு வகை சக்திகள் உண்டு. எனவே தினசரி கீரைகள் உண்பது முடியாவிட்டால் அடிக்கடியாவது விதவிதமான கீரைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

கீரைகளை வாங்கு முன் கவனிக்க வேண்டியவை

வாங்கும் கீரை புதிதாக, பசுமையாக இருக்க வேண்டும். மஞ்சள் நிற கீரைகளை தவிர்க்கவும். இலைகள் வாடி, வதங்கி இருக்கக் கூடாது.

'ஒட்டைகள்' உள்ள கீரைகளை தவிர்க்கவும். இவை கிருமி தாக்குதலால் பாதிக்கப்பட்டவை.

பருவத்திற்கேற்ற கீரைகள்

சித்தர்கள், அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய கீரைகளை பட்டியலிட்டிருக்கின்றன.

எல்லா பருவங்களிலும் சாப்பிடக்கூடிய கீரைகள்

பொன்னாங்கண்ணிக்கீரை, கொத்தமல்லிக்கீரை, புதினா, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசிலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை.

தவிர்க்க வேண்டிய காரணங்கள்

இரவில் கீரைகளை உண்ணக்கூடாது. தலைக்கு குளித்த நாட்களில், சோகை உள்ளவர்களும், ஆஸ்துமா, சைனஸ் போன்ற கபநோய்கள் உள்ளவர்களும் கீரையை தவிர்க்க வேண்டும்.

கீரை ஒரு சாத்வீக உணவு மாமிச உணவுகள், மீன் உணவுகளுடன் கீரையை சேர்த்து உண்ணக் கூடாது. மலச்சிக்கல் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படும்.

கீரைகளை சமைக்கும் முறை

சமைக்கு முன் கீரை இலைகளை ஆய்ந்து, சுத்தமான குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.

வேக வைக்க, குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தவும். சமையல் சோடாவை சேர்க்கக் கூடாது. மாறாக சிறிதளவு புளித்தண்ணீரை தெளிக்கலாம்.

அரைக்கீரை

அரைக்கீரையின் தாவரவியல் பெயர் - Amaranthus Tristis

சமஸ்கிருதம் - மேக நாதா, இந்தி - லால் சாக், சும்லீ சாக்

தமிழின் இதர பெயர்கள் - சிறுகீரை, கிள்ளுக்கீரை, அறுகீரை இந்தியா முழுவதும் பயிராகும் அரைக்கீரை 30 செ.மீ. (ஒரு அடி) உயரம் வளரும் இந்த கீரையின் இலைகளும், இளந் தண்டுகளுமே உண்பதற்கு ஏற்றவை. இவற்றை அறுக்க அறுக்க மீண்டும் வளர்ந்து செடியாகும். எனவே இந்த கீரை 'அறுகீரை' என்றும் சொல்லப்படுகிறது.

பயன்கள்

உடலுக்கு வெப்பத்தைத் தரும். உடலுக்கு பலமளிக்கும்

பிரசவமான பெண்களுக்கு சக்தியை தரும்

நரம்பு தளர்ச்சியை போக்க அரைக்கீரை சாற்றில் மிளகை ஊற வைத்து, உலர்த்தி தூளாக்கி தினமும் 1/2 தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிடவும்.

அரைக்கீரை காமத்தை தூண்டும். கசகசா, தேங்காய்ப்பால், குடமிளகாய் இவற்றுடன் அரைக்கீரை சேர்த்து சமைத்து உண்ண ஆண்மை பெருகும்.

அரைக்கீரையை பருப்புடன் சேர்த்து 1 மாதம் சமைத்து சாப்பிட்டால் சோகை மறையும்.

அரைக்கீரை விதைகளிலிருந்து ஒரு வித தைலம் எடுக்கப்படுகிறது. விதைகளை தண்ணீர் நீக்கிய தேங்காயில் நிரப்பி (தேங்காயின் ஒரு கண்ணை திறந்து) பிறகு மரத்துண்டால் மூடி, சதுப்பு நிலத்தில் 40 (அ) 50 நாட்கள், புதைத்து வைக்கவும். பிறகு எடுத்து தேங்காய் உடைத்து அதில் உள்ளதை எடுத்து, நல்லெண்ணையுடன் கூட்டி எரித்து தைலம் வடித்து, தலையில் தேய்த்து முழுகி வர, தலை வலி தலை பாரம் போகும். தலை முடி கருகருவென வளரும். இந்த தைலம் கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.

No comments:

Post a Comment