Tuesday, October 6, 2015

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவரை பூ ....


இன்று நீரிழிவு நோயின் பாதிப்பு இல்லாதவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். 40 வயதைக் கடந்தவர்கள் முக்கால் வாசிப் பேர் நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களாக உள்ளனர்.

நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை சக்தியாக மாற்றுவதற்கு கணையத்திலிருந்து கணைய நீர் அதாவது இன்சுலின் சுரக்கிறது. அவ்வாறு கணைய நீர் சீராக சுரந்து சக்தியாக மாற்றாமல் அது சர்க்கரைச் சத்தாகவே ரத்தத்துடன் கலப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உருவாகிறது.

மேலும் உடல் உழைப்பு இன்மை, மன அழுத்தம், உடலுக்கு சீரான சத்துக்களைக் கொண்ட உணவு இல்லாமை, பரம்பரையாக வரும் நீரிழிவு போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இந்த நீரிழிவு நோயின் தன்மை வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு பாதிப்பை உண்டு பண்ணும்.

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்கிறது நவீன மருத்துவ உலகம் . ஆனால் முறையான உணவு முறையாலும், உடற் பயிற்சியாலும் நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்கிறது இந்திய முறை மருத்துவம்.

நீரிழிவு நோய்க்கு சிலர் மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு மேல் சிலர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர். இதுதான் வாழ்வின் இறுதி என நினைத்து சிலர் மாத்திரையின் எண்ணிக்கையை கூட்டியும், ஊசியின் மி.லி. அளவைக் கூட்டியும் பயன்படுத்துகின்றனர்.

சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், அந்த நோயினால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். பொதுவாக சர்க்கரை நோயின் பாதிப்பானது மயக்கம், உடல் தளர்வு, கை கால் சோர்வு, ஞாபக மறதி, கண் பார்வைக் குறைபாடு என பல குறிகுணங்கள் இருந்தால், இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து, ஆரம்ப காலத்திலேயே உணவுக் கட்டுப்பாடு, தியானம், உடற் பயிற்சி, போன்றவற்றால் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயை சித்தர்கள் மதுமேக நோய் என குறிப்பிடுகின்றனர். இதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பல மூலிகை மருந்துகளையும் கூறியுள்ளனர். அவற்றில், பொன்னாவாரை பூ என்ற ஆவாரம்பூ மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பொன்னாவரை பூ பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி.

தமிழத்தில் அனைத்து பகுதிகளிலும் தானாக வளரும் செடியாகும். இதன் இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

பொன்னாவாரைப் பூவை தங்கப் பூ என்றும் அழைப்பார்கள். காரணம், இதில் மேனியைப் பொன்னாக்கும் தங்கச்சத்து மிகுந்துள்ளது.

தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்
மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்
மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம் பூ
-அகத்தியர் குணவாகடம்

பொருள் - நீரிழிவு, வறட்சி, உடலின் வியர்வை நாற்றம் இவற்றைப் போக்கும். உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.

பொன்னாவாரை பூ - 10 கிராம்

மிளகு - 5

திப்பிலி - 3

சுக்கு - 1 துண்டு

சிற்றரத்தை - 1 துண்டு

இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்.

பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும்.

பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும்.

உடல் எரிச்சல் தீரும்.

பொன்னாவாரைப் பூவை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு டீ.. காஃபிக்கு பதிலாக இதனை கஷாயம் செய்து பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

பொன்னாவாவாரம் பூ ஆயுளை மட்டுமல்ல, அழகையும் காக்க வல்லது

No comments:

Post a Comment