Tuesday, August 23, 2016

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி (PCOD - PCOS) !

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி (PCOD - PCOS) !
.
Poly (பாலி) என்பது பல
Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.
OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease (டிஸீஸ்)என்பது நோய்.

ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது.

ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.

Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome) உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள் Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்
- குழந்தையின்மை - சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

- ஹார்மோன் குறைபாடு - சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

- ஒழுங்கற்ற மாதவிடாய் - சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது. 2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும். சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மிகுதியாக இருக்கும்.

- முகத்தில் முடி வளர்தல் - ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.

- எடை அதிகரித்தல் - மாதவிடாய் தள்ளிப்போவதால் உடல் எடை அதிகரிக்கிறது..

- முகப்பரு வரலாம்.

- நிற மாற்றம் - உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும்.

இந்த அறிகுறிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை. சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதே குழந்தைகள் பல பெற்ற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள் வரலாம்

காரணம்
சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

- நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

- பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

- வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

- கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

ஆய்வக பரிசோதனைகள்
ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

ஆலோசனைகள்

- உடல் எடையை குறைத்தல் - உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

- உணவு கட்டுப்பாட்டு - அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும், தவிர்த்தல் நல்லது. காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

- புகை - புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும்.

மருத்துவம்

மாதவிடாய் சீராக வெளிப்படுதலைத் தூண்ட நவீன மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள் உட்கொள்வதின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் ஹோமியோபதி சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்கவேண்டும்

- 14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.

- ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய் ஏற்படுகிறது என்றால்.

- மார்பு , முகம் போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால்.

- உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்

- அளவுக்கு அதிகமாக முகப் பரு ஏற்பட்டால்.

- கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமை நிறமாற்றம் காணப்பட்டால். உடனே மருத்துவரை சந்திக்கவும்.

சித்த வைத்தியம் என்ன சொல்கிறது ?

சினைப்பை நீர்க்கட்டி : சித்த மருத்துவம் மாயமாக்கும்

பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலி சிஸ்டிக் ஓவரி”, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.

மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.

Opinion 2

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லது பயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

பிரச்னைக்குக் காரணம் என்ன? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின் அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம் காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர் இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமான நடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத் தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மா சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

உணவு முறை என்ன?

பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல் எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம், பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவை சினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும் உதவும்.

சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.

மீசை வளர்வது ஏன்?

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில் சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசை வளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.

சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே, கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதி மருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி - யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம் சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்.

1 comment:

  1. I found this article very helpful, and Lady Care Juice truly seems to make a positive difference in women’s daily health. Thanks for sharing your knowledge.

    ReplyDelete