Tuesday, August 23, 2016

"சூதகம்"

மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே "சூதகம்" என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி போன்றவைகளுக்கு நம் முன்னோர்கள் அருளிய தீர்வுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.  முன்னரே குறிப்பிட்ட படி தேவையும், அவசியமும் உள்ளவர்கள் இந்த தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொண்டு தகுந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறேன். பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி தொடர்புடைய பாடல்களை தவிர்த்திருக்கிறேன். சூதக வயிற்றுவலி.. பெரும்பாலும் மாதாந்திர சூதகம் வெளிப்படும் முன்னதாக வயிற்றுவலி இருக்கும். இத்தகைய வயிற்றுவலி சூதகம் வெளிவந்தவுடன் நின்றுவிடும். சிலருக்கு சூதகம் வெளிப்படத் தொடங்கியபின் வயிற்றுவலி இருக்கும். இதற்கு பின்வரும் மருந்துகளைச் சாப்பிட்டால் குணமாகும் என்கின்றனர். மாவிலங்கப் பட்டையைக் அரைத்து அந்த பொடியுடன் 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். இவ்வாறு உண்டு வந்தால் சூதக வயிற்றுவலி குணமாகுமாம்.  மற்றொரு முறையில் வேலிப்பருத்தி என்னும் உந்தாமணி செடியின் கொழுந்து இலையாக ஐந்து இலையுடன், 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். சூதக வயிற்றுவலி குணமாகும்.  வேப்பம் பட்டை 10கிராம், சீரகம் 2 1/2 கிராம் இரண்டினையும் ஒரு சட்டியில் தட்டிப்போட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு அதனை அரை ஆழாக்காக காய்ச்சி எடுத்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க சூதக வயிற்றுவலி குணமாகும் என்கின்றனர்.  சூதகச் சன்னி அளவு மீறிய நரம்பு தளர்ச்சி , மாதவிலக்கின் போது வெளியேற வேண்டிய கழிவு குருதியில் விஷக்கிருமிகள் உண்டாகி விடுவதன் காரணத்தினாலும், அதிக அளவில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விடுவதினாலும், இருதயம், மூளை இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தாலும், பெரும்பாடு, சூதகக்கட்டு, நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, பிரமேகம் இது போன்ற வியாதிகளின் காரணத்தினாலும், அடிக்கடி கருத்தரித்தல் காரணமாகவும், நரம்புகளின் குணம் மாறி அது சன்னியாக மாறிவிடும். இத்தகைய சூதகச்சன்னி ஏற்பட்டால் வலிப்பு உண்டாகும். அடிக்கடி வாய் விட்டுச் சிரிப்பார்கள். அல்லது அழுவார்கள். நர நரவென்று பற்களைக் கடிப்பார்கள். கை, கால்களை முறுக்கி ஒடிப்பது போல முறுக்குவார்கள். சில சமயம் தலையிலுள்ள கூந்தலைப் பற்றிப் பலமாக இழுத்துக் கொள்வார்கள். சில சமயம் நாக்கையும், கையையும் கடித்துக் கொள்ளுவார்கள்.சிலருக்கு இந்த வலிப்பு விட்டு விட்டு வரும். இந்த விதமான வலிப்பு இருக்கும் சமயம், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும், நெஞ்சில் ஏதோ பளுவைத் தூக்கி வைத்தது போலவும் இருக்கும். இடது பக்க அடிவயிற்றில் இரைச்சலும், வலியும் இருக்கும். இந்தச் சன்னியின் கோளாறு, தானே ஆடி அடங்கிவிடும். புயல் அடித்து ஓய்ந்தது போல் உடல் தளர்ந்து போய்விடும். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும். சிறுநீர் அதிக அளவில் தெளிவாக இறங்கும். சன்னி தெளிந்து விடும். சிலர் இந்த நிலையைக் கண்டு பெண்ணுக்கு ஏதோ பேய், பிசாசு பிடித்திருக்கிறதெனக் கருதி அவளை மந்திரவாதியிடம் கொண்டு போய் அவளைப் பல வகையிலும் தொந்தரவு கொடுப்பார்களாம். இதற்கான மருந்தைத் தயாரித்துக் கொடுத்து வந்தால், இந்த நோய்க் குணமாகிவிடும் என்கின்றனர். சன்னியின் போது மயக்கமடைந்து விட்டால், துணியை சிறியதாகச் சுருட்டி நெருப்புப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை லேசாக முகரக் கொடுக்க வேண்டும். புகையை அதிகமாக்கி சுவாசத்துடன் அதிக அளவில் உள்ளே போகும்படி கொடுக்கக் கூடாது.சிறிது புகையைக் காண்பித்து விட்டு, ஓரிரண்டு சுவாசம் போய்வர விட்டு மறுபடி லேசாக காண்பிக்க வேண்டும். ஒரேடியாக அதிகப் புகையை உள்ளே செல்லும்படிச் செய்தால், புகை உள்ளே பந்தனமாகி அபாயத்தை உண்டு பண்ணும். எனவே, கவனமாக புகை கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிஷத்தில் மயக்கம் லேசாகத் தெளியும். முகத்தில் சில்லென்று தண்ணீரை அடித்து துடைத்து வீட்டால் மயக்கம் தெளிந்துவிடும். சூதகக் கட்டி 28 தினங்களுக்கு ஒரு முறை வெளியாக வேண்டிய சூதகமானது அதிக வாயுவின் காரணமாக கருப்பையிலேயே தங்கி, சிறிதளவு கூட வெளியேறாமல் நின்று விடும். இந்தச் சூதகமானது ஒன்றாகக் கட்டித் திரண்டு, உருண்டு பருமனாகி விடுமாம்.இதனை சித்த மருத்துவத்தில்உதிரக்கட்டி, சோணிதக்கட்டி, கற்பசூலை, இரத்தக்கட்டி, கர்ப்பசூலை, சூதகக்கட்டி, கற்சூலை, சூல்மகோதரம் என்று பல பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூதமானது கர்ப்பப் பையிலிருந்து வெளியேறாமல் கட்டிவிட்டால், பிறகு வெளியேறாது. கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய எல்லா குணங்களும் தோன்றும். அதாவது, பசிமந்தம் ஏற்படும். தேகம் வெளுக்கும். ஸ்தனத்தில் கருவளையம் தோன்றி, ஸ்தனமானது பெருத்து விம்மும். சேர்க்கையில் வெறுப்பு உண்டாகும். மார்பு துடிக்கும். ஆயாசம், வாந்தி உண்டாகும். சிலருக்கு ஸ்தனங்களில் பால் சுரக்கும். வயிறு கர்ப்பஸ்திரீ போல பெருத்துக் கொண்டே வரும். கருப்பையில் உள்ள சூதகக் கட்டி குழந்தைபோல அசையும், உருளும், பிரளும். இந்தக் குறிகளைக் கண்டு சில பெண்கள், தாம் கர்ப்பம் தரித்துவிட்டதாகவே எண்ணுவார்கள். சில பெண்களுக்கு பிரசவவலி போல ஏற்பட்டு இந்தக் கட்டி வெளியேறிவிடும். சிலருக்கு இது சூதகக் கட்டி என்று அறிந்து, தக்க மருந்து கொடுத்தால் வெளியேறும்.  இதைப் பற்றிய மேலும் சில விபரங்களை "மெய்க்கர்ப்பம், பொய்க்கர்ப்பம்" என்ற பதிவில் காணலாம்.. சூதக கட்டி குணமாக... சீரகம், சக்திசாரம், நவாச்சாரம் வகைக்கு 30 கிராம். கருஞ்சீரகம், வால்மிளகு, பெருங்காயம், வாய்விளங்கம் கோஷ்டம் வகைக்கு 10 கிராம்.கடுகு, ரோகினி, வெடியுப்பு, மிளகு, இந்துப்பு, கறியுப்பு, கடுக்காய், வளையலுப்பு, கல்லுப்பு வகைக்கு 5 கிராம். இவைகளை எல்லாம் சுத்தம் பார்த்து நன்றாகக் காய வைத்து, கல் உரலில் போட்டு இடித்துத் தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு பெரிய முற்றின தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் திறந்து, அதனுள் இந்தத் தூள்களை எல்லாம் செலுத்தி, துளைக்கு மரக்கட்டையைச் சீவி அடைத்துவிட்டு, 21/2 அடி ஆழம் பூமியைத் தோண்டி, அதில் இந்தத் தேங்காயை வைத்து, மண்ணைத் தள்ளி மூடி, புதைத்த இடத்தில் அடையாளம் வைக்க வேண்டும். இதைத் தயாரித்து சூரிய உதயத்தில் புதைக்க வேண்டும். ஏழாம் நாள் காலை சூரிய உதயத்தில் இதைத் தோண்டி எடுக்க வேண்டும். எடுத்த தேங்காயைப் பக்குவமாக தேங்காய் ஓட்டை மட்டும் உடைத்து எடுத்துவிட்டு, அதனுள் உள்ள மருந்துத் தூளுடன் தேங்காயையும் நைத்து அம்மியில் வைத்து தேன் விட்டு மைபோல அரைத்து, மெழுகுபதம் வந்தவுடன் எடுத்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளையும் கழற்சிக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக ஏழுநாள் சாப்பிட்டால் சூதகக்கட்டி உடைந்து வெளியேறிவிடும். பிறகு மாதா மாதம் சூதகம் ஒழுங்காக வெளியாகும். பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் ஆண் - பெண் சேர்க்கை கூடாது என்கின்றனர். Make Money Online : http://ow.ly/KNICZ

No comments:

Post a Comment