Tuesday, August 23, 2016

மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்!

மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்! 

: அகத்தியர், சித்த மருத்துவம், பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. இந்த தகவல்களை முழுமையாக தொகுப்பது என்பது சவாலான ஒன்று.மேலும் நிறைய நேரம் பிடிக்கும் காரியம் என்பதால், என்னால் இயன்ற அளவில் திரட்டிய தகவல்களையே இனி வரும் பதிவுகளின் ஊடே பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல்கள் பலவற்றை இன்றும் நாம் கைவைத்தியம் என்கிற பெயரிலும், பாட்டி வைத்தியம் என்கிற பெயரில் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன். மற்றொரு முக்கிய குறிப்பு ஒன்றினையும் இந்த இடத்தில் பதிவது அவசியம் என கருதுகிறேன். சித்தர் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே "சித்தர்கள் இராச்சியம்" வலைப்பதிவின் முதன்மையான நோக்கம். எனவே இங்கே பகிரப் படும் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாய் மட்டும் அணுகிட வேண்டுகிறேன். தேவையும், அவசியமும் உள்ளவர்கள் தேர்ந்த வல்லுனர்கள்/மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு. சித்தர் பெருமக்கள் மாதவிலக்கு தொடர்பில் அருளிய தீர்வுகளை மூன்று வகையாய் அணுகிடலாமென நினைக்கிறேன். அவை முறையே... மாதவிலக்கு வராமல் இருப்பது, தள்ளிப் போவது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு. மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, உடல் தளர்வு போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு. பெரும்பாடு எனப்படும் அதிகமான, தொடர் குருதிப் போக்கினை கட்டுப் படுத்துவதற்கான தீர்வு. இன்றைய பதிவில் மாதவிலக்கு வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போகும் பிரச்சினைகளுக்கான இரண்டு தீர்வுகளை மட்டும் பார்ப்போம்.“அகத்தியர் வைத்தியம் 600” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் இவை. மீறாமற் றூரமில்லாப் பெண்களுக்கு வேலியிலைப் பசுவின்பாலில்மிகவருந்த நேரும் கூறான தூதுவளை சாறுவாங்கி கொடைகொடையாகக் கிடக்குங் குளத்துப்பாசி ஏறாமற் புனைக்கா யளவுகூட்டி யிதமாகச் சர்க்கரையும் மேகமொன்றாய் பேறுபட மூன்றுநா ளருந்தும்போது புறப்படுமே செங்குருதி சிவப்பதாமே  வேலிப் பருத்தி இலையை அரைத்து பசுப்பாலில் கலக்கி, அதிகளவில் அருந்த மாதவிலக்கு ஏற்படும் என்கிறார். மேலும் குளத்துப்பாசியை புனைக்காய் அளவு எடுத்து அத்துடன் தூதுவளை சாற்றையும் அளவான சர்க்கரையும் சேர்த்து மூன்று நாட்கள் அருந்த மாதவிலக்கு உண்டாகுமாம். கிரமாதீத சூதகம் ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி என்பது 28 தினங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மாதவிலக்கு கண்டு மறைந்து போவதையும், அல்லது சேர்ந்தாற் போல 2-3 மாதங்களுக்கு சூதகமே வெளிப்படாமலும் இருக்கும். இதனை சித்த மருத்துவத்தில் 'ஒழுங்கீன சூதகம்' 'கிரமாதீத சூதகரோமம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு வெங்காயம், கரியபோளம், மிளகு இவைகளில் வகைக்கு 21/2 கிராம் எடுத்து, அவற்றைத் தனித்தனியே இடித்துத் தூளாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அம்மியில் சிறிதளவு தேன் விட்டு அதில் இந்த தூளை இட்டு, மை போல் அரைத்து, அதை 16 சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை உணவிற்குப் பின்னர் இரண்டு மாத்திரை வீதம் வாயில் போட்டு, அரை ஆழாக்கு அளவு பசுவின்பால் குடித்து வர வேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு ஒழுங்கு முறையுடன் மாதா மாதம் தவறாது வெளியேறுமாம். Make Money Online : 

No comments:

Post a Comment