Sunday, July 17, 2016

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் – அறிமுகம்.    உடலின் இயற்கையான வேகங்கள் என சித்தர்களால் அழைக்கப்படும் இயற்கை உடல் இயங்கியல் நிகழ்வுகளைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம்.

இயற்கையான 14 வேகங்கள் என்னென்ன?

1. உடலிலிருந்து இயற்கையாக வெளியேறும் வாயு ஏப்பம், அபான வாயு (மல வாயிலிருந்து வெளியேறும் வாயு)

2. தும்மல்

3. சிறுநீர்

4. மலம்

5. கொட்டாவி

6. பசி

7. நீர்வேட்கை (தாகம்)

8. இருமல்

9. இளைப்பு (பெருமூச்சு)

10. தூக்கம்

11. வாந்தி

12. கண்ணீர்

13. விந்து

14. மூச்சு

இவை பதினான்கும் உடல் இயங்கியலில் முக்கிய நிகழ்வுகளாகும். இவற்றில் சில நாள்தோறும் நிகழும், சில எப்போதாவது நிகழும். இந்த 14 இயற்கை நிகழ்வுகளையும் அடக்குதல் கூடாது. இந்த 14 உடல் இயங்கியல் நிகழ்வுகளும் உயிர் ஆற்றலோடு (வளி, அழல், ஐயம் – விளக்கங்கள் தனியே உள்ளன) நெருங்கிய தொடர்புடையன. எனவே இவை தடுக்கப் படும் போது உயிர் ஆற்றல் ஓட்டப் பாதைகளில் தடை ஏற்பட்டு சில துன்பங்கள் விளையும். இவை தொடரும் போது பெரிய நோய்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இவற்றை அடக்காமல் அந்தந்த வேகங்களுக்கு (இயக்கங்களுக்கு) ஏற்றாற்போன்ற பழக்க வழக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்வதால் உடல் நன்நிலையில் பாதுகாக்கப் படும்.

மலம், மலக் காற்று, மூன்று முறை சாதரணமாக உடலை விட்டு வெளியேற வேண்டும். சிறுநீர் தடையின்றி 6 முறை உடலை விட்டு வெளியேற வேண்டும். தும்மல் சிக்காமல் வர வேண்டும். இவை அனைத்தும் உடல் இயக்கத்தோடு ஒத்திசைந்து குறிப்பிட்ட இடைவெளியில் நிகழ வேண்டும். அப்படி நிகழ்ந்தால் எந்தக் காலத்திலும் நோய்கள் உடலில் தோன்றாது. உடல் இரும்பினை ஒத்து வலிமையாகும்.

# பொதுவாக கீழ்வாய் காற்று (மல வாய் வழியாக வெளியேறும் காற்று) வெளியேறும் போது தடுக்கவோ அல்லது சிறிது சிறிதாக வெளியேற்றவோ கூடாது. தும்மல், கொட்டாவி, இருமல், மூச்சு, பெருமூச்சு, வாந்தி, போன்றவை உருவாகும் போது அவற்றை தடுக்க முயற்சிக்கக் கூடாது.

# சிறுநீரையும் மலத்தினையும் வெளியேற்ற வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்ட உடனேயே வெளியேற்றிவிட வேண்டும். இவற்றை நம்மால் சிறிது முயற்சி செய்தால் சிறிது நேரம் அடக்கி வைக்க முடியும், அப்படி செய்வதால் அவற்றில் உள்ள கழிவுகளும் நச்சுத் தன்மையுடைய பொருட்களும் மீண்டும் உடலால் உட்கிரகிக்கப் படும். இது பெரும் கேட்டினை விளைவிக்கும்.

# பசியையும், தாகத்தையும் அடக்கி வைத்திருந்தால் ஏழு உடற் கட்டுகளுக்கும் உயிர் ஆற்றலுக்கும் ஓட்டம் கிடைக்காமல் துன்பம் உண்டாகும்.

# உறக்கத்திற்கான முதல் அறிகுறி உடலில் தோன்றிய உடனேயே உறங்கிவிடுதல் வேண்டும். அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தொடர்ந்து விழித்திருந்து வேலை செய்யும் போது உயிர் ஆற்றலில் குறைவு ஏற்படுகிறது.

# விழிநீர் (கண்ணீர்) அடக்குதல் என்பது இங்கே துக்கத்தினை அடக்குதலை குறிக்கும். துக்கத்தினை அடக்கும்போதும் அழுகை வரும்போது அழாமல் இருக்கும் போதும் அது நோயாக மாறும்.

# உறவின் போது வெளியேறும் விந்துவை அடக்கக் கூடாது. இதனால் உடல் பாதிப்புகளும் மன பாதிப்புகளும் ஏற்படும்.

உடம்பின் இயக்கங்களைத் தடுத்தால் ஏற்படும் கேடுகளையும் முறையாக தடுக்காமல் விட்டால் ஏற்படக் கூடிய நன்மைகளையும் இனி வரும் பதிவுகளில் பார்க்க உள்ளோம்

No comments:

Post a Comment